சட்டவிரோதமாக மதுபானம், சிகரெட் விற்பனை செய்த 30 பேருக்கு அபராதம்

சட்டவிரோதமாக மதுபானம், சிகரெட் விற்பனை செய்த 30 பேருக்கு அபராதம்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட்டுக்களை  விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபான வகைகளை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேருக்கு 67,500 ரூபா அபராதம் நேற்று திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மதுவரித் திணைக்களத்தின்  யாழ். அலுவலகத்தினரால் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.மகேந்திரராஜா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட்டுக்களை  விற்பனை செய்த 15 பேரில்  தலா ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபா அபராதமும் அனுதிப்பத்திரமின்றி கள்ளு விற்பனை செய்த 10 பேரில் தலா ஒவ்வொருவருக்கும் 500 ரூபா அபராதமும் அனுமதிப்பத்திரமின்றி  சாராயம் விற்பனை செய்த 2 பேருக்கு 25,000 ரூபா அபராதமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

மேலும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத 3 பேருக்கு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு, வேலணை ஆகிய பகுதிகளில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் மதுவரித் திணைக்களத்தின்  யாழ். அலுவலகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட்டுக்களை  விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபான வகைகளை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 பேர் கைதுசெய்யப்பட்டனர்.