கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு; வைகோ, நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி சென்னையில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறுவித போராட்டங்களை நடத்தி வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நேற்று சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தை மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இயக்கங்கள் முன்னெடுக்கும் என்றும் அறிவித்திருந்தன.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர், மேலும் சென்னைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்காக ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட்டவர்களும் அந்த மாவட்ட எல்லைகளிலும் ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடைகளை மீறி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மண்டபத்தில் கூடிய ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதன் பிறகு எழும்பூர் மண்டபத்திலிருந்து சட்டசபையை முற்றுகையிட பேரணியாக அனைவரும் செல்ல முயற்சித்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.