கூடங்குளம் அணுமின் உற்பத்தி நடவடிக்கைகள் 2013இல் ஆரம்பமாகும் என இந்தியா அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் ஆர்.கே.சின்ஹா கூறியுள்ளார்.

இந்திய அணுசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஆயிரம் மெகாவொட் திறன் கொண்ட முதல் பிரிவில், அடுத்த ஆண்டு மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும். அணுசக்தி கட்டுப்பாடு கழகத்தின் நிபந்தனைகளாலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளாலும், மின் உற்பத்தி ஆரம்பிக்குத் நாளை சரியாக கூற முடியாதுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மாதங்களில், இப்பணிகள் நிறைவடையும்.

மின் உற்பத்தி ஆரம்பித்தால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறைவடையும். அதேநேரத்தில், இரண்டாவது மின் உற்பத்தி பிரிவு, குறிப்பிட்ட காலத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும்.

இன்றைய சூழ்நிலையில், தொழில் நுட்பம், மூலப்பொருள் போன்றவை பற்றி கவலைப்படத் தேவையில்லை. மக்களின் ஒப்புதலை பெறும் வகையில், நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அணுக்கதிர் வீச்சால் ஏற்படும், அபாயம் பற்றிய விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.