குஷ்பு வந்தால் வரவேற்போம்! பா.ஜனதா

குஷ்பு வந்தால் வரவேற்போம்! பா.ஜனதா

பா.ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் ஜி.வெங்கடேசன் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.வானதி சீனிவாசன் ஆம்பூர் வந்தார். 

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 

தெற்காசியாவிற்கு தலைமை வகிக்கும் தகுதி இந்தியாவிற்கு உள்ளது என்பதை பூடான் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இந்தியாவை பலம் மிக்க நாடாக அவர் கண்டிப்பாக உருவாக்குவார். 

தமிழகத்தில் தேர்தலின் போது மோடி அலை வீசவில்லை என்று கூறிவிட முடியாது. மோடி அலை வீசியதால்தான் தமிழக பா.ஜ.க.விற்கு 5.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. பல இடங்களில் தி.மு.க. பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால்தான் வாக்குகள் சிதறிவிட்டது. எம்.பி.க்களின் எண்ணிக்கையை பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய நதிநீர் இணைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ள நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். 

நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகியது அவரது சொந்த விருப்பம். அவர் பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம். யார் பா.ஜ.க.விற்கு வந்தாலும் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.