குழு 1ல் இருந்து அரையிறுதிக்குச் செல்ல இலங்கை, மே.தீவுகள் அணிகளுக்கு வாய்ப்பு

இலங்கையில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் குழு 1ல் இருந்து அரையிறுதிப் போட்டிக்குச் செல்ல இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல முத்தையா முரளிதரன் மைதானத்தில் இன்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான சுப்பர் 8 சுற்றில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 42, திலகரத்ன தில்ஷான் 16, குமார் சங்கக்கார 13, ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 28, ஜீவன் மென்டிஸ் 18, திஸர பெரேரா 25, திரிமான்ன 13, நுவன் குலசேகர 1 என ஓட்டங்களைக் குவித்தனர்.

பதிலுக்கு 169 என்ற வெற்றிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்படி சுப்பர் 8 சுற்றில் குழு ஒன்றுக்கான அனைத்து போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் முதல் அணியாக 6 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. குழு 1ல் மேற்கிந்திய தீவுகள் அணி 4 புள்ளிகளைப் பெற்று ஓட்ட சராசரி அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

சுப்பர் 8 சுற்றில் இரண்டாவது குழுவில் இருந்து அரையிறுதிக்குத் தெரிவாகும் அணிகள் எவை என்பது நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவுகளை அடுத்து தெரியவரும்.