கும்மிடிப்பூண்டியில் 225 மி.மீட்டர் மழை பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்தது. கும்மிடிப்பூண்டியில் அதிகபட்சமாக 225 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.

மேலும் திருவள்ளூர் நகரில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது.

சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்: (மி.மீட்டரில்) பொன்னேரி-134, ஊத்துக்கோட்டை-59, பள்ளிப்பட்டு-31, கும்மிடிப்பூண்டி-225, திருத்தணி-26, திருவள்ளூர்-69, பூந்தமல்லி-50, அம்பத்தூர்-45. மழை தொடர்ந்து பெய்தபோதும், பூண்டி ஏரி உள்பட மாவட்டத்தின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது.