காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த மாணவர் ; மும்பையில் சம்பவம்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு, 23–வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் பாலு(வயது21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். ஆனால் அந்த மாணவி காதலிக்கவில்லை.
 
தொடர்ந்து அஜய் பாலு தொல்லை கொடுத்து வந்ததால், இதுபற்றி தனது பெற்றோரிடம் மாணவி கூறி வருந்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அஜய் பாலுவை அழைத்து கண்டித்தனர். இது அவருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. நேற்று முன்தினம் காலை மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அஜய் பாலு கத்தியுடன் அங்கு சென்றார். இதை கண்ட மாணவி அவரை வெளியில் செல்லும்படி எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் பாலு கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார். மேலும் உடலில் பல இடங்களில் குத்தினார். இதனால் நிலைகுலைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.
 
சத்தம் கேட்டு மாணவியின் பாட்டி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். உடனே அஜய் பாலு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் விரட்டினர். அப்போது அஜய்பாலு அங்குள்ள 23 மாடி கட்டிடத்தின் மேலே சென்று அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில், அஜய்பாலு ஏறி நின்ற 23–வது மாடியின் கீழ் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
 
தகவல் அறிந்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் கீழே இருந்தபடியே ஒலிபெருக்கி மூலம் அஜய் பாலுவிடம் பேசி கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் சுமார் 2 மணி நேரமாக கீழே இறங்க மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு தெரியாமல் கட்டிடத்தின் மேலே ஏறிய தீயணைப்பு படை வீரர்கள், அஜய் பாலு கீழே குதித்து விடாமல் லாவகமாக அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கீழே இறக்கி கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 
 
பொலிஸார் அஜய்பாலுவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.