காங்கிரசை ஒதுக்கி வைத்த திமுக இன்று பூஜ்யம்

காங்கிரசை ஒதுக்கி வைத்த திமுக இன்று பூஜ்யம்

ராகுல் காந்தியின் 44–வது பிறந்தநாள் விழா சத்திய மூர்த்தி பவனில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 

தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியதாவது:– 

காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலை சந்தித்து. மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அடுத்த மாதம் 15–ந் திகதி காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

சத்திய மூர்த்தி பவனில் நிறுவுவதற்கு காமராஜர் சிலையும், சத்தியமூர்த்தி சிலையும் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் 20, 21–ந் திகதிகளில் திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும். 

கட்சியை பலப்படுத்த மாநில நிர்வாகிகள் மாவட்டந் தோறும் சென்று பூத்கமிட்டிகளை பலப்படுத்த உள்ளனர். நானும் அடுத்தமாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். 

இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இப்போது அவர்களை புத்த பிட்சுகள் தாக்குகிறார்கள். இலங்கையில் உள்ள இஸ்லமியரை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். 

ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு மத்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறை போதாது. விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது:– 

தேர்தலில் தோற்று விட்டதால் காங்கிரஸ் காரர்கள் சோர்ந்துவிட வில்லை. இந்த ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் காலம் விரைவில் வரும். எதிலும் மோடி தன்னைத்தான் முன்னிலைப்படுத்துகிறார். விரைவில் அவரது சாயம் வெளுக்கப்போகிறது. 

ஒரு காலத்தில் இந்தியை எதிர்த்து ஒன்று பட்டு போராடினோம். மீண்டும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. எனவே, இந்தியை எதிர்த்து போராடும் காலம் விரைவில் வரும். 

காங்கிரஸ் ஆட்சியின் போது புகார்களில் சிக்கிய மந்திரிகள் நீக்கி வைக்கப்பட்டனர். ஆனால் இப்போது பாலியல் புகாரில் சிக்கியவர் கூட மத்திய மந்திரியாக இருக்கிறார். தேர்தலில் எப்படிப்பட்ட தலைவர்களுக்கும் சறுக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான். 

தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்யம் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் (தி.மு.க.) நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்யம் ஆகி விட்டார்கள். காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பி விடலாம் என்ற கனவு கண்டீர்கள். எல்லாம் கலைந்து விட்டது. இப்போது அங்கு இருந்து ஒரு பூ வும் போய் விட்டது. 

எந்த மக்களால் நாம் புறக்கணிக்கப் பட்டோமோ அந்த மக்களால் மகுடம் சூட்டப்படும் காலம் மீண்டும் வரும். ஞானதேசிகன் அனைவரையும் அனுசரித்துக் செல்கிறார். 

சிறுசிறு மனத்தாங்கல்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி மற்றும் நிர்வாகிகள் ஜவகர் பாபு, சைதை ரவி, வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ் பாண்டியன், ஜி.ஆர். வெங்கடேஷ், எம்.எஸ்.திரவியம், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் திரு.வி.க நகரில் ஆஷாநிவாஸ் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் அனுராதா அபி உணவு வழங்கினார். இதில் பிரேம்குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீராம், ஆசைத்தம்பி, சார்லஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

தென் சென்னை காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் ராகுல் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு நாச்சிக்குளம் சரவணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் கராத்தே தியாகராஜன், தி.நகர் ஸ்ரீராம், ஹரிகிருஷ்ண ரெட்டி, கலியமூர்த்தி, சேத் பட்டு அபுபக்கர், மாம்பலம் செல்வம், பிருந்தாவனம் சரவணன், தி.நகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அடையாறு அவ்வை இல்லத்தில் அடையாறு பிரசாத் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. 

சைதாப்பேட்டையில் செஞ்சி ராஜேந்திரன், ஈகை கர்ணன் தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன. கிண்டிலோகநாதன் இனிப்பு வழங்கினார். 

கோடம்பாக்கத்தில் 500 பேருக்கு கராத்தே தியாக ராஜன் இலவச வேட்டி, சேலை வழங்கினார். இதில் ராஜசேகர் விவேகானந்தன், பொன்பாண்டியன், நாச்சிகுளம் சரவணன், சுசீலா கோபாலகிருஷ்ணன், கலிய மூர்த்தி, ஹரிகிருஷ்ண ரெட்டி, ராம்குமார், பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தி.நகர் திருப்பதி கோவில், அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

எம்.ஜி.ஆர். நகரில் ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. சுசீலா கோபாலகிருஷ்ணன், ராம்குமார், செரீப் கலந்து கொண்டார்கள். ராயப் பேட்டையில் ஐ.ஓ.சி. பாலு தலைமையில் சிவசுப்பிர மணியன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 

வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.ரங்க பாஷ்யம் தலைமையில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.