கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் - 20 பேர் பலி

பாகிஸ்தான் - கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை போன்று போலியான அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்தினுள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

விமான நிலையத்தில் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். 

விடிய விடிய நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 

மேலும் தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து கராச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலையடுத்து கராச்சி சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.