கராச்சியில் நாம் தான் தாக்கினோம்! தலிபான்கள் பொறுப்பேற்பு

கராச்சியில் நாம் தான் தாக்கினோம்! தலிபான்கள் பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நேற்றிரவு (08) துப்பாக்கிதாரிகள் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில் விமான நிலையத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்த பின்னர், இன்று (09) மேலும் இரண்டு குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்டதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன. 

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், தாக்குதலை நடத்திய 10 பேரும் அடங்குவர். நேற்றிரவு சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். 

ஆயுததாரிகள் விமான நிலையத்தின் சரக்கு முனையகத்தின் வழியாகவும், தனியார் விமான முனையகத்தின் வழியாகவும் புகுந்து கையெறிகுண்டுகளையும், தானியங்கித் துப்பாக்கிகளையும் பயன்படுத்தித் தாக்கியதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. 

விமான நிலையத்தில் இருந்த சரக்குப் பொதிகளுக்கு தாக்குதல்தாரிகள் தீவைத்தனர். ஆனால் விமானங்கள் எதுவும் தாக்குதலுக்குள்ளாகவில்லை எனத் தெரிகிறது. 

இந்தநிலையில் இந்தத் தாக்குதலை தாம்தான் நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபான் பிரிவினர் கூறியிருக்கின்றனர். 

"பாகிஸ்தானின் கிராமங்கள் மீது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்காகப் பேசிய ஷாஹிதுல்லா ஷாஹித் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.