கடவுள் மீது சத்தியமா ஜெயலலிதா கேஸ் தீர்ப்பு பற்றி நான் ஜோதிடம் சொல்லவில்லை: டி.ராஜேந்தர்

கடவுள் மீது சத்தியமா ஜெயலலிதா கேஸ் தீர்ப்பு பற்றி நான் ஜோதிடம் சொல்லவில்லை: டி.ராஜேந்தர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 27ம் தேதி தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பு குறித்து, சசிகலாவிடம் டி.ராஜேந்தர் ஜோதிடம் சொன்னதாக வெளியான செய்திக்கு டி.ராஜேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாரம் இருமுறை வெளியாகும் ஒரு அரசியல் பத்திரிகையில் (செப் 24 - 26 இதழில்) மதிப்பிற்குரிய சின்ன மேடம் சசிகலாவுக்கு டி.ராஜேந்தர் சொன்ன ஜோதிடம் என்ற தலைப்பில் இரண்டு பக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். 

அதிலே... சின்ன மேடம் சசிகலாவை டி.ராஜேந்தர் பத்து தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார் என்று தொடங்கி, ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். 

அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல, நான் எந்த நட்சத்திர ஓட்டலிலும் மதிப்பிற்குரிய சின்ன மேடம் சசிகலா அவர்களைச் சந்திக்கவும் இல்லை. 

ஜோதிடம் கூறவில்லை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு 27ம் தேதி வர இருப்பதாகக் கூறப்படும் தீர்ப்பு குறித்து எந்த விதமான ஜோதிடமும் சொல்லவுமில்லை. 

ஆண்டவன் அருள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, எந்தக் கருத்தையும் அனுமானங்களையும் சொல்லக் கூடாது என்ற அடிப்படை ஞானத்தை ஆண்டவன் அருளால் பெற்றதால், அது பற்றி நான் சொல்லவில்லை. 

கடவுள் மீது சத்தியமாக இது எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியம். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், அப்படியே ஒரு வேளை நான் அவர்களைச் சந்தித்து இருந்தால், ஆமாம் சந்தித்தேன்... என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக்கக் கூடியவன் என்பதே உண்மை. நம்பிக்கைக்கு உரியவன் நான் மதிப்பிற்குரிய முதல்வர் அம்மா அவர்கள் மீதும், சின்ன மேடம் அவர்கள் மீதும் மரியாதை உள்ளவன்.

 அவர்களுக்குப் பரிச்சயமானவன் மட்டுமல்ல, பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன் என்பதை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.