கசூரினா கடலில் நீந்திய மாணவர்கள், பொலிஸார்!

காரைநகர் கசூரினா கடற்கரையில் யாழ் மத்திய கல்லூரி, காரைநகர் தியாகராஜா வித்தியாலய மாணவர்கள் மற்று யாழ்.மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான நீச்சல் பயிற்சி யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி கேரத் தலைமையில் இன்று(04.09.2012) நடைபெற்றது.

கடற்கரை மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், பொஷன் பண்டிகைக் காலத்தில் கடமையாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரி சத்திறசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய நீச்சல்ப் பயிற்சியாளரும், பொலிஸ் அதிகாரியுமான கேரத், 1948 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் போட்டி 1976 ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்குள் சிரேஷ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மித்திர ஆரிய சிங்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியதாஸசில்வா ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த பொலிஸ் நீச்சல் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக தற்போதய சிரேஷ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனாரட்ணவும், செயலாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சூலசிறியும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் கசூரினா கடற்கரையில் நீரிழ் மூழ்கிய 20 பேர் பொலிஸ் நீச்சல் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய யாழ் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா, இவ்வாறான நீச்சல்ப் பயிற்சிகள் யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு மாணவனும் எதிர் காலத்தில் நல்ல ஒரு பிரஜையாக திகழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சிறிகுகனேசன், ஊர்காவற்துறை பொலிஸ் அதிகாரி தயன்பிரசன்னா , பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்