ஐ.நா. குழு நாளை யாழ்ப்பாணம் வருகிறது

இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நாளை திங்கட்கிழமை யாழ். மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவல கத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வடஅமெரிக்க பிரிவுகளுக்குப் பொறுப்பான ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் இருவருமே நாளை யாழ். மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர்.

யாழ்.மாவட்டத்துக்கு வருகைதரும் குழுவினர், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலக்சுமியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். தொடர்ந்து யாழிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து போரின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

இதன்பின்னர் சாவகச்சேரியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். மாலை 4 மணியளவில் கிளிநொச்சி செல்லும் ஐ.நா. குழுவினர் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பகுதிகளுக்கும் செல்வர். மீளக்குடியமர்ந்துள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.