ஐஎன்எஸ் காமோர்தா போர் கப்பல் நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

ஐஎன்எஸ் காமோர்தா போர் கப்பல் நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!
இந்தியாவிலேயே, உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் கப்பலான ஐஎன்எஸ் காமோர்தா, சனிக்கிழமை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்படுகிறது. 
 
இந்திய தொழில் நுட்பத்தில் புதிய போர் கப்பல் ஐஎன்எஸ் காமோர்தா, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
 
3100 டன் எடையும், சுமார் 100 மீட்டர் நீளமும், 13 மீட்டர் உயரமும் கொண்ட இந்த கப்பல், சிறிய அளவிலான ஏவுகணைகளையும், ஹெலிகாப்டர்களையும் தாங்கி செல்லும் திறன் உடையதாகும். மேலும் எதிரிகளின் நீர் மூழ்கி கப்பல்களை அடையாளம் கண்டு தாக்கும் திறன் உடைய அதிநவீன ரேடார் உள்ளிட்ட கருவிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன .
 
இந்த கப்பலை கடற்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொடக்க விழா, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நாளை நடைபெற உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐஎன்எஸ் காமோர்தாவை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து உரையாற்றுகிறார்.