எல்லா நாளும் ஓட்டங்கள் குவிக்க முடியாது

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான் அணி இறுதிசுற்றுக்குள் நுழைய அச்சாணியாக இருந்தவர் சகலதுறை ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி என்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ஓட்டங்கள் விளாசி கடைசி ஓவரில் திரிலிங்கான வெற்றியை தேடித்தந்த அப்ரிடி, வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலும் இறுதி கட்டத்தில் ருத்ர தாண்டவமாடினார். 

அதில் 25 பந்துகளில் 7 சிக்சருடன் 59 ஓட்டங்கள் திரட்டி பாகிஸ்தான் 327 ஓட்டங்கள் இலக்கை ‘சேசிங்’ செய்ய வித்திட்டார். ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மிர்புரில் நாளை மோதுகின்றன. இதற்கு தயாராகி வரும் 34 வயதான அப்ரிடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– 

எனது ஆட்டத் திறமையின் மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் எல்லா நாளும் இதே போன்று ஓட்டங்கள் குவிக்க முடியாது. அதனால் தான் துடுப்பாட்டம் மட்டுமின்றி, பந்து வீச்சிலும் கவனம் செலுத்துகிறேன். 

இந்த வழியில் அதாவது துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சில் எனது திறமையை வெளிப்படுத்தி, அணிக்கு உதவிட என்னை தயாராக வைத்துக் கொள்ள விரும்புகிறேன். 2015–ம் ஆண்டு உலக கிண்ணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். உடல் தகுதி இருக்கும் வரை எனது வாழ்க்கை முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து தொடர்ந்து விளையாடுவேன். 

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அந்த தினமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். மற்றவர்கள் அது பற்றி (ஓய்வு குறித்து) பேச வாய்ப்பு தரமாட்டேன். 

இந்திய மண்ணில் நான் எப்போதும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இந்தியாவை தவிர வேறு எந்த இடத்திலும் ரசித்து, அனுபவித்து விளையாடியதில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நமக்குள் நல்ல உறவு இருக்க வேண்டும். கிரிக்கெட்டால் மட்டுமே இரு நாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் காண முடியும். 

இந்தியா–பாகிஸ்தான் இடையே அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். அது தான் என்னுடைய விருப்பமும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் எப்போதும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. 

அச்சுறுத்தல் நிலவிய போதிலும் கூட, பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உறவுக்கு, கிரிக்கெட்டால் மட்டுமே புத்துயிர் அளிக்க முடியும். விளையாட்டு நட்புறவை வளர்க்கும். இவ்வாறு அப்ரிடி கூறினார். 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களின் எதிர்கால வாய்ப்பு பற்றி அப்ரிடியிடம் கேட்ட போது ‘இது பற்றி இந்திய அரசிடம் கேளுங்கள். ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்’ என்று காட்டமாக பதில் அளித்தார்.