எய்ட்ஸ் தாக்கத்திற்குள்ளான பெற்றோரின் 63 குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி

எய்ட்ஸ் தாக்கத்திற்குள்ளான பெற்றோரின் 63 குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி

இந்தியாவில் எயிட்ஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாநில அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மேல் நிலைக்கல்வி முடித்தது கல்லூரி படிப்பை தொடரும் நிலையிலுள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எயிட்ஸ் தாக்குதலுக்குள்ளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக இடங்களை ஒதுக்கி கொடுக்க மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பாக 2014 – 15- கல்வியாண்டில் 73 பேரிடம் இருந்து விண்ணப்பங்களை வாங்கியது. 

அவர்களின், இலவச உயர்கல்விச் சேர்க்கைக்காக, அரசு, தனியார் கல்லூரி நிறுவனங்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. 

பெரியார் பல்கலை பதிவாளர் அங்கமுத்து தலைமையில், நடந்த இந்த கூட்டத்தில், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளின் முதல்வர்கள், பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில், எய்ட்ஸ் பாதிப்பு குடும்பநபர்களுக்காக, 63 சீட் மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அதன்படி, சேலம் அரசு கலைக்கல்லூரி, ஏ.வி.எஸ்., கல்லூரியில், சக்தி கைலாஷ் கல்லூரி, நங்கவள்ளி கைலாஷ் கல்லூரியிகளில் தலா, 10 இடங்களும், ஏ.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், 4, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில், 5, தீவட்டிப்பட்டி சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, 5, ஓமலூர் பத்மவாணி கல்லூரி, 5, சேலம் கிறிஸ்டியன் கல்லூரி, 5, தியாகராஜா பாலிடெக்னிக், 4, தாகூர், நாலெட்ஜ், எஸ்.ஆர்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், தலா ஒன்று, எக்ஸல் இன்ஜினியரிங் கல்லூரி, மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில், தலா, ஒன்று வீதம் மொத்தம், 63 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் முயற்சியை மாவட்ட எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வம் மேற்கொண்டு வருகிறார்.