ஊட்டியில் கடும் குளிர் - மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு பின் பனி பொழிவு அதிகரிக்கும்.

கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, எச்.பி.எப்., இந்து நகர், தமிழகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம், குதிரை பந்தய மைதானம், பைக்காரா மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களின் மேற்பகுதிகளில் வெள்ளை நிறத்தில் ஐஸ் கட்டிகள் சூழ்ந்திருந்தன.

புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது. இதனால் நேற்று கடுங்குளிர் நிலவியது. காலை நேரத்தில் தேயிலை தோட்டம், காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதியுற்றனர்.

வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 22.5 , குறைந்தபட்சம் 6.1 டிகிரி செல்சியசாக இருந்தது. பொதுவாக 6.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதத்தில் மட்டுமே இருக்கும்.

இம்முறை நவம்பர் மாதமே உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மேலும் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.