இலங்கை - நியூசிலாந்து டுவென்டி டுவென்டி போட்டி இன்று

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டுவென்டி டுவென்டி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஒரு டுவென்டி டுவென்டி போட்டி, 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ற் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியாக இது இடம்பெறவுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை அணி தனது புதிய தலைவர் அன்ஜலோ மத்தியூஸின் கீழ் புதிய மாற்றமொன்றை இன்று ஏற்படுத்திச் செல்கிறது.

அத்தோடு இலங்கையின் மிகச்சிறந்த டுவென்டி டுவென்டி வீரர்களான மஹேல ஜெயவர்தன, லசித் மலிங்க இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரர் டானியல் விட்டோரி இத்தொடரில் சேர்க்கப்படவில்லை என்பதோடு, உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றிய நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முழுவதும் தொடர்ச்சியான மழை காணப்படுவதால் இரண்டு அணிகளும் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்க முடிந்திருக்கவில்லை. அத்தோடு மழை தொடர்ச்சியாக பெய்துவருவதால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

வானிலை எதிர்வுகூறலின் அடிப்படையில் இன்று கண்டியில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: திலகரட்ண டில்ஷான், டில்ஷான் முனவீர, குமார் சங்கக்கார, அன்ஜலோ மத்தியூஸ், ஜீவன் மென்டிஸ், டினேஷ் சந்திமால், திஸர பெரேரா, நுவான் குலசேகர, ஷமின்ட எரங்க, சச்சித்திர சேனநாயக்க, அகில தனஞ்சய.

நியூசிலாந்து: ரொப் நிக்கல், ரொம் நிக்கல், பிரென்டன் மக்கலம், ரொஸ் ரெய்லர், ஜேம்ஸ் ஃபிராங்ளின், அன்ட்ரூ எலிஸ், ஜேக்கப் ஓரம், நேதன் மக்கலம், ரொனி ஹீரா, ரிம் சௌதி, கைல் மில்ஸ்.