இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகை மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி, பொருட்களை பறித்துக் கொண்டு, வலைகளை கடலில் வெட்டி விட்ட, இலங்கை கடற்படையினரின் செயல் மீனவர்களிடம் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட "நீலம்´ புயல் காரணமாக, வீடுகளில் முடங்கிக் கிடந்த நாகை மீனவர்கள் புயலுக்கு பின் கடந்த 2ம் திகதி, நூற்றுக் கணக்கான விசைப் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடித்த மீனவர்கள், கரைக்கு திரும்பி வரும் போது, நாகையில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில், சிறிய கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கப்பலில் இருந்து மீனவர்களின் படகுகளில் இறங்கிய, இலங்கை கடற்படையினர், ஆழ்கடல் பகுதிக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டு, ரப்பர் தடி மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

இதில் மீனவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படாவிட்டாலும் கடுமையான அடி விழுந்துள்ளது.

மேலும், படகுகளில் இருந்த ஜி.பி.எஸ்., எக்கோ, வயர்லெஸ் கருவிகள், மொபைல் போன்களை பறித்துக் கொண்டு, டீசல், ஐஸ் கட்டிகள், உணவுப் பொருட்கள், மீன்களை கடலில் தூக்கி வீசியவர்கள், வலைகளை வெட்டி கடலில் விட்டு விரட்டியுள்ளனர்.

பலத்த பொருட்சேதமும், மன வேதனையும் அடைந்த மீனவர்கள், நேற்று முன்தினமும், நேற்றும் வெறுங்கையுடன் கரைக்கு திரும்பினர்.

இது குறித்து மீன்வளத் துறையினரிடம் மீனவர்கள் புகார் தெரிவிக்கவில்லை.