இலங்கை அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சூடாமணி கைது

அவுஸ்திரேலியாவுக்கு விசா எடுத்து வேலை பெற்றுத் தருவதாக இலங்கை அகதியை ஏமாற்றி பணம் பறித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னை - விருகாம்பாக்கம் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் அகதிகள் முகாமில் உள்ள வசந்த குமார் என்ற இலங்கை அகதியால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சூடாமணி (31 வயது) கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து தன்னிடம் சூடாமணி பணம் பறித்ததாக வசந்த குமார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சூடாமணி இவ்வாறு பலருக்கு வெளிநாடு செல்ல உதவியுள்ளதால் தான் அவரிடம் உதவி கோரியதாக அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சூடாமணியிடம் இருந்து 8 போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் கணினி என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் வேலை பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்து சூடாமணி பலரிடம் ஒரு லட்சம் இந்திய ரூபா வீதம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சூடாமணியிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது, தான் ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எனவும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் கடன்களை அடைக்க இவ்வாறு செயற்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூடாமணியுடன் சேர்ந்து மக்களை ஏமாற்ற உதவியவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

´அகரம்´ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்த சூடாமணியிடம் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் சூடாமணியின் சகோதரரும் இந்த ஏமாற்று நடவடிக்கையில் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.