இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சித்தவர்கள் கைது

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சித்தவர்கள் கைது

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு ஒன்று மர்மமான முறையில் நின்றது. இதுபற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசைப்படகில் வந்த 8 பேர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.

8 பேரையும் பிடித்து பொலிசார் விசாரித்தனர். இலங்கை அகதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை நாகப்பட்டினத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்த அந்த கும்பல் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக கேரளாவில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் ஒரு விசைப்படகை வாங்கி நாகப்பட்டினம் நோக்கிச் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி அருகே வந்தபோது படகு பழுதாகி உள்ளது. இதனால் செப்பனிடுவதற்காக படகை கரையில் நிறுத்தி விட்டு அவர்கள் லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற திண்டிவனம் அனுமந்தை குப்பத்தைச் சேர்ந்த மாதவன் (வயது 27), திருப்பூர் இருவம்பாளையத்தைச் சேர்ந்த சசிதரன் (22), திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த சிவரூபன் (38), கோவை பூலுவப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (31) ஆகிய 4 பேரை கன்னியாகுமரி பொலிசார் கைது செய்தனர்.

அவர்களுடன் இருந்த திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்குமார், செந்தில்பிரபு, பாலமுரளி, ரிஸ்வான் ஆகியோர் இலங்கை அகதிகள் ஆவார். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கைதான கும்பலுடன் வந்துள்ளனர். அவர்களிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அவர்களில் ரிஸ்வான், தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி அந்த கும்பல் ரூ.1 1/2 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கன்னியாகுமரி பொலிசாரிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் கைதான 4 பேர் மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான 4 பேருடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களையும் பிடிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.