இலங்கையில் சிறப்பாகச் செயற்பட முடியும்: ஸ்ருவேர்ட் ப்ரோட்

தென்னாபிரிக்காவிற்கு எதிரான நேற்றைய டுவென்டி டுவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறிய போதிலும், இலங்கையில் வைத்து அவ்வணியால் சிறப்பாகச் செயற்பட முடியும் என இங்கிலாந்து டுவென்டி டுவென்டி சர்வதேச அணியின் தலைவர் ஸ்ருவேர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளத் தடுமாறியிருந்தது.
ரொபின் பீற்றர்சன், ஜொஹன் போத்தா ஆகியோர்களை எதிர்கொள்ளச் சிரமப்பட்ட இங்கிலாந்து அணி, விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

எனினும் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய வீரர்கள் காணப்படுகிறார்கள் எனத் தெரிவித்த ஸ்ருவேர்ட் ப்ரோட், இலங்கையில் வைத்து உலக டுவென்டி டுவென்டி தொடரில் தங்களால் சிறப்பாகச் செயற்பட முடியும் என தெரிவித்தார்.

ஒய்ன் மோர்கன் சுழற்பந்து வீச்சாளர்களை ஆக்கிரமித்து ஆடக்கூடிய ஒரு வீரர் எனத் தெரிவித்த ஸ்ருவேர்ட் ப்ரோட், கடந்த காலங்களில் அவர் சிறப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதைக் கண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இளைய வீரரான ஜொஸ் பட்லரும் சுழற்பந்து வீச்சை அதிரடியாக ஆடக்கூடியவர் என ஸ்ருவேர்ட் ப்ரோட் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் தங்களால் சிறப்பாக ஆட முடியாவிட்டாலும், எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட முடியும் என நம்பிக்கை வெளியிட்ட ஸ்ருவேர்ட் ப்ரோட், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களது இயல்பான ஆட்டமே அணியின் வெற்றிக்கு உதவும் எனவும் தெரிவித்தார்.