இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா வெற்றி

4-வது ஐ.சி.சி. 20ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 12-ம் திகதி இலங்கை வந்தனர். 2007-ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இடம் பெற்ற ஏ பிரிவில் உள்ளது. இந்திய அணி 19-ம் திகதி ஆப்கானிஸ்தனையும், 23-ம் திகதி இங்கிலாந்தையும் சந்திக்கும்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியஅணி இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இன்று இலங்கையுடனான போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி நாணயச்சுழற்சியில் வென்று தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்று அறிவித்தார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்தது. டோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் 42 பந்தில் 55 ஓட்டங்ளை (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ரோகித்சர்மா 26 பந்தில் 37 ஓட்டங்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 1 சிக்சர்களும் அடங்கும். குலசேகரா 2 விக்கெட்டும், மலிங்க, ஹெரத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடியது. 15 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இலங்கை அணி 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முனவீர 3 ஓட்டங்களிலும், தில்சான் 1 ஓட்டத்திலும் இர்பான் பதான் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

19.3 ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இர்பான் பதான் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தமிழக வீரர் பாலாஜி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.