இரவு 8 மணிவரை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சர் பணிப்புரை!

தோட்டப்புறங்களிலுள்ள சகல ஆஸ்பத்திரிகளதும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் தினமும் இரவு 8.00 மணி வரையும் மக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பெருந்தோட்டங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளும் தினமும் இரவு 8.00 மணி வரையும் மக்களுக்கு சேவை வழங்கக் கூடிய வகையில் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிடுமாறும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்கவுக்கு  பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டப் பிரதேசங்களில் 150 க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இந்த ஆஸ்பத்திரிகளும் தினமும் இரவு 8.00 மணிவரையும் மக்களுக்குச் சேவை வழங்குவதற்கு தேவையான ஆளணியையும் மருந்துப் பொருட்களையும் அவற்றுக்குப் பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் சிறிசேன அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்க ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் தினமும் இரவு 8.00 மணி வரை மக்களுக்கு சேவை வழங்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் வழமை போன்று பிற்பகல் 4.00 மணிக்கே தினமும் சேவையை நிறைவு செய்து கொள்கின்றன.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தோட்ட மக்களும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் அப்பிரதேசங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளும் இரவு 8.00 மணிவரை சேவை வழங்குவது அவசியம் என்றும் அமைச்சர் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.