இரண்டாவது டெஸ்டிலும் இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து: தொடர் இந்தியா வசம்

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசீலாந்து அணியை வீழ்த்தி தொடரை 2- 0 என்று கைப்பற்றியது.


முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 365 ஓட்டங்களும், இந்தியா 353 ஓட்டங்களும் எடுத்தன. 12 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. டெய்லர் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை; எடுத்தார். ஜித்தன் பட்டேல் 10 ஓட்டங்களுடனும், போல்ட் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜித்தன் பட்டேலும், போல்ட்டும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் நியூசிலாந்து அணியின் இறுதி விக்கெட் விழுந்தது. கடைசி விக்கெட்டை சகீர்கான் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தின்போது மேலும் 16 ஓட்டங்கள் சேர்த்து 248 ஓட்டங்களில் சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஒஜா தலா 2 விக்கெட்டுகளும், சகீர்கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2ஆம் இன்னிங்கை தொடங்கியது. ஷேவாக்கும், கம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியான ஆட்டத்துடன் போட்டியை தொடங்கினார்கள்.
38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சேவாக் படேல் பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து கம்பீருடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்பீர் வெளியேற டெண்டுல்கர் களமிறங்கினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 88 ஓட்டங்களை எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப்பின் களமிறங்கிய டெண்டுல்கரும், புஜாராவும் பொறுமையாக விளையாடி வந்தனர். 33 ஓவர் முடிவில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. டெண்டுல்கர் 23 ஓட்டங்களுடனும், புஜாரா 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்

மழை விட்டதும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஆடிய டெண்டுல்கர், 27 ஓட்டங்களுடன் போல்டு ஆனார். அரை சதத்தை நெருங்கிய புஜாரா, 48 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து வந்த ரெய்னா 10 பந்துகள் வரை எதிர்கொண்டும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அரங்கு திரும்பினார். இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 166 ஆக இருந்தது.

இதன்பின்னர் கோலியும், டோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 5 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. கோலி 51 ஓட்டங்களுடனும், டோனி 48 ஓட்டங்களுடனும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அணித் தலைவர் டோனி மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 20 ஓவர்களில் ஆட்டமிழக்காமல் 6வது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்தியாவில் அதிக போட்டிகளை டோனியின் தலைமையின் கீழ் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் சௌரவ் கங்கூலியின் சாதனையை டோனி முறியடித்துள்ளார்.
 

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற இந்தியா கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக 103 மற்றும் 51 ஓட்டங்களை பெற்ற விராட் கோலி தேர்வு செய்யப்பட தொடரின் நாயகனாக 18 விக்கெட்டுகளை 2 டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய ரவிச் சந்திரன் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இத்தொடரையடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இரண்டு இருபது-20 போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் போட்டி 8ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும், 2ஆவது போட்டி 11ஆம் திகதி சென்னையிலும் பகலிரவு ஆட்டங்களாக நடக்கின்றன.