இம்முறை ஜெயலலிதா சற்று மாறுதலாக கடிதம் எழுதியுள்ளார்

இம்முறை ஜெயலலிதா சற்று மாறுதலாக கடிதம் எழுதியுள்ளார்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக மத்திய அரசு முன்வரவேண்டும் என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 

இராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களையும் சிறைபிடித்ததோடு, அவர்களின் மீன்பிடிக்கும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கை ஜனாதிபதியை தன்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சிக்கே அழைத்து, இந்தியப் பிரதமர் பெருமைப்படுத்தினார். அவரும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்ததோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையிலே உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார். 

அதற்குப் பிறகும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. இந்திய சிறையிலே இருந்த இலங்கை மீனவர்களையெல்லாம் நமது மத்திய அரசும் விடுதலை செய்தது. 

மேலும் இலங்கைக் கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடிப்பது, மீன் பிடிக்கின்ற சாதனங்களை சேதப்படுத்துவது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்து, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடித்ததும் கடிதம் எழுதுவதைப்போல அல்லாமல், இந்த முறைசற்று மாறுதலாக எழுதியிருக்கிறார். 

அதாவது கடந்த முறை மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது, பிரதமருக்கு இவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரதமர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டதால், அனைத்து மீனவர்களும் இலங்கையில் நீண்ட நாட்களுக்கு சிறை வைக்கப்படாமல், உடனடியாக விடுவிக்கப்பட்டதற்காக முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் அவருடைய வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டு எழுதியிருக்கிறார். 

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்கனவே இரண்டு முறை இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகாவது, மீனவர்கள் கைது படலம் நிற்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, நீடித்துக் கொண்டே போகிறது. 

எனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக முன்வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்