இந்திய அணியின் பலவீனங்களை சர்வதேசம் அறிந்து விட்டது ?

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கிண்ண தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்றில் 4 அணிகள் வெளியேறின. ஆனால் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணி, லீக் சுற்றில் சிறப்பான வெற்றிகளை பெற்று சூப்பர் 8 சுற்றிற்குள் நுழைந்தது.

ஆனால் சூப்பர் 8 சுற்றில் சொதப்பிய இந்திய அணி தட்டி தடுமாறி 2 வெற்றிகளை பெற்றது. எனினும் அரையிறுதி சுற்றிற்கு முன்னேறும் அளவிற்கு ரன் ரேட் இல்லாமல், தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் லீக் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் வெளியேற காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. லீக் சுற்றில் இந்தியாவிற்கு எதிரான ஆடிய கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த எந்த வீரர்களும், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

அதேபோல பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்வில்லை. இதனால் அவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சூப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா, தென் ஆப்பிரிக்காவிடம் ஒரு ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இதனால் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்களின் பலவீனங்களை, சர்வதேச கிரிக்கெட் அணிகள் அறிந்து கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆல்பி மார்கல் அளித்த பேட்டி அமைந்தது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ளும் முன் பேட்டி அளித்த அளித்த அவர் கூறியதாவது,

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் நான் பங்கேற்றுள்ளேன். இதன்மூலம் இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. வீரர்களின் அறையில் இருக்கும் போது, இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதை குறித்து தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் ஆலோசித்து, அதற்கேற்ப திட்டமிட்டு இந்தியாவை எளிதாக வீழ்த்துவோம் என்றார்.

இதேபோல சர்வதேச கிரிக்கெட் அணிகளின் துடுப்பாட்டவீரர்களை மிரட்டி வந்தவர் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா. ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய அவரது பந்துவீச்சை, உலக கோப்பை தொடரில் துடுப்பாட்டவீரர்கள் அடித்து ஆடினர்.

ஆனால் இந்திய தலைவர் டோணி மேற்கண்ட கருத்தை முழுமையாக மறுக்கிறார். ஐபிஎல் தொடருக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அவர்.

இது குறித்து டோணி கூறியதாவது,

ஐபிஎல் என்பது ஒரு உள்ளூர் தொடர். அதில் அதிகளவிலான சர்வதேச வீரர்களுடன் அனைத்து அணிகளும் களமிறங்குகின்றன. ஆனால் தொடரில் உள்ளூர் வீரர்களுக்கு தான் பொறுப்பு அதிகம். ஆனால் சர்வதேச போட்டிகளை பொறுத்த வரை, அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் பொறுப்பு உண்டு. இதனால் ஐபிஎல் தொடர் மூலம், சர்வதேச போட்டிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.