ஆஸி. அணியை விரட்டியடித்து இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் தகுதியைப் பெற்றது மே.தீவுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை சந்திக்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் பெற்றுக் கொண்டது.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை ... ஓட்டங்களால் வெற்றிகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய போட்டியில் கொழும்பு ஆர்,பிரேமதாஸ மைதானத்தில் ரசிகர்களுக்கு சிக்ஸர் விருந்து அளித்த கிறிஸ் கெயில் 06 சிக்ஸர்கள் 05 பவுண்டரிகள் அடங்களாக 75 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன் டுவைன் பிராவோ 3 சிக்ஸர்களுடன் 37 ஓட்டங்களையும் மாலன் சமுவல்ஸ் 2 சிக்ஸர்களுடன் 26 ஓட்டங்களையும் 3 சிக்ஸர்கள் அடங்களாக கிரன் பொலாட் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் ஆட அவுஸ்திரேலிய அணி 206 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப விக்கெட்கள் மளமளவென சரிந்தன. டேவிட் வோனர் 1, வொட்சன் 7, மைக் ஹஸி 18, வைட் 5, டேவிட் ஹஸி 0, மெத்திவ் வேட் 1 என ஆஸி வீரர்கள் தொடர்ச்சியாக சரிந்தனர்.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெயிலி 63 ஓட்டங்கள் பெற்று அரைச்சதம் கடந்து அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சி அளித்தார். வேறு எவரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரகாசிக்கவில்லை.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இதன்படி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக் கொண்டது. போட்டியின் நாயகனாக கிரிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டார்.