ஆப்கானிஸ்தானை அடித்து விரட்டியது இங்கிலாந்து

இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து வீரர் லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்து ஒரு ஓட்டத்தினால் சதத்தை தவரவிட்டமை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை குவித்தது. பதிலளித்த ஆப்கானிஸ்தான் 17.2 ஓவர்களில் 80 ஓட்டங்களுடன் சுருண்டது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.

இங்கிலாந்து எடுத்த 196 ஓட்டங்கள்தான் இந்த உலகக் கிண்ணத்தில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஒட்ட எண்ணிக்கையாகும்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் தோற்றதால் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றான "சூப்பர் -8´ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.