ஆசியக் கிண்ணம் யாருக்கு? பாக். - இலங்கை இன்று மோதல்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் மோதும் ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த கடந்த மாதம் 25ம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமானது. 

லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. இதில் நான்கு போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி இலங்கை அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

அத்துடன் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற அதேவேளை ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவி 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் ஹோலி தலைமையிலான இந்திய அணியால், 9 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. 

அந்த அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்றதுடன், இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை பங்களாதேஷ் அணி நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து சொந்த மண்ணிலேயே மோசமாக தோற்று, எந்த ஒரு புள்ளிகளையும் பெறாாது இறுதி இடத்தில் உள்ளது. 

எனினும் டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் (4புள்ளிகள்) நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தநிலையில் முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 

அத்துடன் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.