அஷ்ரபுலுக்கு 8 ஆண்டு விளையாட தடை

பங்காளதேஷில் ஐ.பி.எல். பாணியில் பி.பி.எல். (பங்காளதேஷ் பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த ஆண்டு நடந்த போது, சூதாட்ட புயல் வெடித்தது. சில முன்னணி வீரர்கள் ‘மேட்ச் பிக்சிங்’சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில் பங்காளதேஷ் அணியின் முன்னாள் தலைவர் முகமது அஷ்ரபுல்லும் ஒருவர். பங்காளதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். 

இந்த நிலையில் அவர் மீதான தண்டனை விவரத்தை பங்காளதேஷ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பாயத்தின் தலைவர் காதிமுல் இஸ்லாம் தெரிவித்தார். 

பங்காளதேஷின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் ஒருவராக திகழ்ந்த 29 வயதான அஷ்ரபுல் 61 டெஸ்ட் மற்றும் 177 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அஷ்ரபுல் விளையாடிய அணியான டாக்கா கிளாடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஷிஹப் ஜிஷானுக்கும் இதே குற்றத்துக்காக 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 

இதே போட்டியில் விளையாடிய போது சூதாட்டக்காரர்கள் தங்களை அணுகியதை தெரிவிக்காமல் மறைத்த புகாருக்காக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் லோ வின்சென்ட்டுக்கு 3 ஆண்டுகளும், இலங்கையின் லோகுராச்சிக்கு 1½ ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதே போன்று இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற போது சூதாட்டத்தில் ஈடுபட்ட சஸ்செக்ஸ் முன்னாள் வீரர் நவித் ஆரிப்புக்கு (பாகிஸ்தானைச் சேர்ந்தவர்) ஆயுட்கால தடை விதித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.