அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா இளைஞர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது

இளைஞர் உலகக் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான 8வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

டவுன்ஸ்வில்லியில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6வது இடத்திலுள்ள இந்திய அணி, முதலிடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவுடன் மோதியது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்தது.

துடுப்பாட்டத்தில் வில்லியம் போசிசிஸ்டோ ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களும், ஆஸ்டன் டர்னர் 43 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 37 ஓட்டங்களும் பெற்றனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 226 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் உன்முக் சந்த் ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் கடந்து 111 ஓட்டங்களும், பின்பு களமிறங்கிய சுமித் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆட்டநாயகனாக அணித்தலைவர் உன்முக் சந்த் தெரிவு செய்யப்பட்டார்