அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான்

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. முதலிரண்டு விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே இழந்த பாகிஸ்தான் அதன் பின்னர் நசீர் ஜம்ஷெத், கம்ரன் அக்மல் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் சிறந்த ஓட்டத்தை அடைந்தது. இறுதி நேரத்தில் அப்துல் ரஷாக்கின் அதிரடியும் பாகிஸ்தான் அணிக்குக் கைகொடுத்திருந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக நசீர் ஜம்ஷெத் 46 பந்துகளில் 55 ஓட்டங்களையும், கம்ரன் அக்மல் 26 பந்துகளில் 32 ஓட்டங்களையும், அப்துல் ரஷாக் 17 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஸ்ரார்க் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷேவியர் டொகேர்ட்டி, ஷேன் வொற்சன், பற் கமின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்கை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய அணியால் ஓட்டங்களைக் குவித்திருக்க முடியவில்லை.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மைக்கல் ஹசி 47 பந்துகளில் 54 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 15 ஓட்டங்களையும், மத்தியூ வேட் 13 ஓட்டங்களையும், கமரன் வைட் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரஷ ஹாசன் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹபீஸ் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக பாகிஸ்தானின் ரஷ ஹாசன் தெரிவானார்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 111 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.