அவுஸ்திரேலியாவின் முதல் நோட்டு 300,000 டொலருக்கு விற்பனை!

அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக 1817ல் அச்சிடப்பட்ட நூறு 10 ஷில்லிங் நோட்டுகளில் மிச்சமிருப்பதாகக் கருதப்படும் ஒரேயொரு நோட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,10,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை ஆனது. 

இந்தத் தகவலைக் கூறிய நோபில் நாணயவியல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் நோபில் உலகம் முழுவதிலுமிருந்து இதற்கான ஏலத்தொகை குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். 

காலனியின் ரூபாய் நோட்டு விற்பனையில் இது பெரிய சாதனையாகும் என்று குறிப்பிட்ட ஜிம் இதனை வாங்கியவர் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் நிர்வாகியாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். அவரின் இந்த ரூபாய் நோட்டுக்கான திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் ஜிம் கூறினார். 

இந்த நோட்டினுடைய வரலாற்று மதிப்பே அதனுடைய ஏலத்தொகை அதிகரித்ததிற்குக் காரணம் என்று கருதும் ஜிம் இந்த நோட்டினை அச்சடித்த முன்னாள் வெஸ்ட்பேக் வங்கியில்கூட பழைய நோட்டுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். 

கடந்த 1809களில் லச்லன் மக்வாரி என்பவர் கவர்னராக சிட்னிக்கு வந்தார். காலனி ஆட்சிக்காலமாக இருந்த அந்த சமயத்தில் நிலையான நாணய அமைப்பு எதுவும் இல்லாமல் அந்தப் பகுதி நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து வந்தது. 

கவர்னருக்கென அதிக அளவு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் ஒரு வங்கியை நிறுவுவதற்காக அவர் அளித்த கோரிக்கை லண்டனால் நிராகரிக்கப்பட்டது. எனவே நாணய பற்றாக்குறையைப் போக்குவதற்காக கடந்த 1812ஆம் ஆண்டு 10,000 பவுண்டு மதிப்பு கொண்ட ஸ்பெயின் நாட்டு நாணயங்களை அவர் இந்தியாவிலிருந்து பெற்றார். அதன்பின்னர் 1813 ஆம் ஆண்டில் அவரால் உருவாக்கப்பட்ட முதல் ´ஹோலி டாலர்´ என்று குறிப்பிடப்பட்ட நாணயம் கடந்த வருடம் 4,95,000 அவுஸ்திரேலிய டொலருக்கு விற்கப்பட்டு சாதனை புரிந்தது. 

தொடர்ந்து தேவைகள் அதிகரித்ததன் விளைவாக 1816 ஆம் ஆண்டில் மீண்டும் வங்கிக்கான திட்டம் புத்துயிர் பெற்றது. இந்த முறை லண்டனின் அனுமதியைப் பெற்ற மக்வாரி 1817ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நியு சவுத் வேல்சிற்கான புதிய வங்கியைத் திறந்தார். அப்போது முதன்முதலாக அடிக்கப்பட்ட நோட்டுகளின் ஒரு வடிவமே பின்னாளில், 2005ஆம் ஆண்டில் தனியார் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டு புதன்கிழமையன்று ஏலவிற்பனையில் சாதனை புரிந்ததாக கூறப்படுகின்றது.