அழகிகள் உள்ளதாகக் கூறி பாரிய நிதி மோசடி செய்தவர் கைது

அழகிகள் உள்ளதாகக் கூறி பாரிய நிதி மோசடி செய்தவர் கைது

இணையத்தில் அழகிகளின் படத்தை வெளியிட்டு, அவர்களுடன் உல்லாசமாக இருக்க கீழே உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை நேற்றிரவு சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 

இணையத்தில் அழகிகளின் படத்தை வெளியிட்டு அதில் செல்போன் எண்களை குறிப்பிட்டு, அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால் படத்தில் உள்ள அழகிகள் சப்ளை செய்யப்படுவர் என கூறி ஒரு ஆசாமி விளம்பரப்படுத்தி வந்தான். 

செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளும் இளைஞர்களை நேரில் வருமாறு கூறி, அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொள்ளும் ஆசாமி, குறிப்பிட்ட இடத்தை கூறி அனுப்பி வைத்துள்ளான். அங்கு சென்றால் அழகிகள் யாரும் இருப்பதில்லை. இதனால், ஆயிரக்கணக்கில் பணத்தை இழக்கும் இளைஞர்கள் குடும்ப கௌரவம் கருதி புகார் கொடுக்காமலேயே இருந்து வந்தனர். 

ஒரு சிலர் மட்டும் புகார் தெரிவித்து வந்தனர். இதுபற்றி, சேலம் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கும், சங்ககிரி டிஎஸ்பி கோபால் மற்றும் இடைப்பாடி பொலிசாருக் கும் சில புகார்கள் வந்தன. இதன்பேரில், இடைப்பாடி பொலிஸ் ஏற்பாட்டின்பேரில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 3 பேர் சம்பந்தப்பட்ட ஆசாமியை தொடர்பு கொண்டு தங்களுக்கு அழகிகளை வழங்க செய்ய முடியுமா? என கேட்டுள்ளனர். 

அப்போது, அவர் சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் வருமாறு கூறினார். அதன்படி, 3 பேரும் நேற்றிரவு வந்தனர். அங்கு லேப்டாப்புடன் நின்றுகொண்டிருந்த வாலிபர், 3 பேரையும் அடையாளம் கண்டு அழகிகள் உள்ளதாக கூறி அழைத்தது நான்தான் என அறிமுகம் செய்து கொண்டார். 

பின்னர், ஒவ்வொருவரிடம் தலா ரூ.2 ஆயிரம் வசூலித்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பொலிசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். 

பின்னர் நடத்திய விசாரணையில் அவர், இடைப்பாடி க.புதூரைச் சேர்ந்த சிங்காரவேலு (38) என்பது தெரிய வந்தது. இணையத்தில் அழகிகளின் படத்தை வெளியிட்டு சேலம், தர்மபுரி, ஈரோடு, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஏமாற்றி இலட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிங்காரவேலுவை கைது செய்தனர்.