அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இலங்கை

 

உலகக் கிண்ண இருபதுக்கு-20  கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தகுதியை இலங்கையணி அதிகரித்துக்கொண்டுள்ளது.

 


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக போட்டியில் அபாரமாக 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதை அடுத்து, பெரும்பாலும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டி பள்ளேகலை மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 130 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன 49 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

22 ஓட்டங்களுக்கு இலங்கையின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோதிலும் மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் வேகமாக ஓட்டங்களைக் குவித்து வெற்றியை இலகுபடுத்தினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் துடுப்பாட்டத்தில் மாலன் சாமுவெல்ஸ் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

எனினும் இலங்கையணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பார்த்த ஓட்ட இலக்கை அடையத் தவறியது.

இலங்கை அணி சார்பில் அஜந்த மென்டிஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக மஹேல ஜெயவர்தன தெரிவானார்.