அண்ணனுக்காக தம்பி மணப் பெண்ணுக்கு தாலிக் கட்டினார்! திடீர் பரபரப்பு

வேலூரில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட அண்ணன் மாயமான நிலையில், அவரது தம்பி திடீர் மாப்பிள்ளையாகி மணப்பெண்ணுக்கு தாலியை கட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் இளங்கோ(31). அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும், கொணவட்டம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் தீபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து.

திருமணம் இன்று அதிகாலையில் நடைபெறுவதாக இருந்தது. திருமண பத்திரிக்கை ஊர் முழுவதும் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 25ம் தேதி ஆட்டோ சவாரிக்கு சென்ற இளங்கோ, இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடிய பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற இருந்த திருமண அழைப்பு நிகழ்ச்சிக்கு முன்பாக இளங்கோ வீட்டிற்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளங்கோ வீட்டிற்கு வரவே இல்லை. இதனால் திருமணத்திற்காக மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்களும், இளங்கோவின் பெற்றோரும் செய்வது அறியாமல் தவித்தனர்.

இது குறித்து இளங்கோவின் உறவினர் கூடி ஆலோசித்தனர். அப்போது சிலர் இளங்கோவின் தம்பியான அன்பழகனை, மணமகனாக மாற்றலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர். இது குறித்து அன்பழகனிடம் பேசிய போது, திடீர் மாப்பிள்ளையாக மாற அவர் சம்மதித்தார்.

இதையடுத்து நேற்று இரவு 12 மணிக்கு மணமகன் அழைப்பும், இன்று அதிகாலை 6 மணிக்கு திருமணமும் நடைபெற்றது. அண்ணன் இளங்கோவிற்கு பதிலாக திடீர் மாப்பிள்ளையாக மாறிய அன்பழகன், மணப்பெண் தீபாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

அண்ணன் இளங்கோ மாயமானதால் திருமணம் நின்று தனது குடும்பத்திற்கு ஏற்பட இருந்த அவமானத்தை போக்க திடீர் மாப்பிள்ளையாக மாறிய அன்பழகனை, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.