அணு உலை பூமிக்கு அடியில் பனிக்கட்டி சுவர்

புகுஷிமா அணு உலையில் இருந்து கசியும் கதிர்வீச்சு பாதிப்புள்ள தண்ணீர், இதர நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்க பூமிக்கடியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பனிக்கட்டி சுவர் எழுப்பப்பட உள்ளது. 

ஜப்பானில் 2011 மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் புகு ஷிமா அணுஉலை கடுமையாக சேதமடைந்தது. அந்த அணுஉலை அப்படியே மூடப்பட்டது. 

ஆனால் அங்குள்ள அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகி கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த பன்னாட்டு விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் அணுஉலையில் இருந்து கசியும் கதிர்வீச்சு பாதிப்புள்ள தண்ணீர் இதர நீர் நிலைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் நூதன உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளனர். அணுஉலையைச் சுற்றி பூமிக்கடியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பனிக்கட்டி சுவர் எழுப்பத் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கின.