அடையாளம் காணப்பட்டுள்ள மலேசிய விமானத்தின் 122 பாகங்கள்

காணாமற்போன  மலேசிய விமானத்தினுடையது என கருதப்படும் 122 பாகங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் அடையாளங்கண்டுள்ளதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த 23ஆம் திகதி செயற்கைக்கோளினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களில் 23 மீட்டர் நீளம் வரையான பாகங்கள் காணப்படுவதாக அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசைன் அறிவித்துள்ளார். 

பிரான்சின் எயார்பஸ் செயற்கைக்கோளினால் அனுப்பப்பட்ட படங்களில் பாகங்களில் சில மிகப் பிரகாசமாகவும் திடப்பொருள் போன்று தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி கடந்த 8ஆம் திகதி புறப்பட்ட MH370 எனும் மலேசிய விமானம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கலாக  239 பேருடன் காணாமற்போன  விமானம் இந்தியப் பெருங்கடலில் தென் பகுதியில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.