'சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடிய கவன செலுத்த வேண்டும்'

யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவருவதால், சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர்கள் கூடிய அக்கறை கொள்ளவேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட உளவள சமூக இணைப்பாளர் கு.கௌதமன் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'14 முதல் 18 வயது வரையான சிறுவர்கள் தற்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். பிள்ளைகள் வெளியில் செல்லும்போது அவர்கள் எங்கு செல்கின்றார்கள்?  என்ன காரணத்திற்காக அவர்கள் வெளியில் செல்கின்றார்கள்? போன்றவற்றை பெற்றோர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பாடசாலை முடிவடைந்து பிள்ளை வீட்டிற்கு திரும்பும்போதும் மேலதிக வகுப்பிற்கோ அல்லது சக நண்பர்களின் வீட்டிற்கோ கற்றல் தொடர்பில் பிள்ளை சென்றுவந்தாலோ பிள்ளைகள் கற்றவற்றை பெற்றோர்கள் அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் கவலையீனமாக இருந்துவிட்டு, பிள்ளைக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் அதனைப் பற்றி சிந்திப்பதில் பிரயோசனம் இல்லை.

தற்போது பெற்றோர்கள் இவ்வாறான நிலைமையிலேயே இருக்கின்றனர். இந்நிலைமையை மாற்றி ஒவ்வொரு பிள்ளைகள் மீதும் பெற்றோர்கள் கூடிய அக்கறை கொள்ளவேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வன்புணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கமுடியுமே தவிர, பிள்ளைகள் செல்லும் பாதைகளை அவதானிக்க முடியாது.  இந்நிலையில், பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடிய கவனம் கொள்ளவேண்டும்' என்றார்.