"பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பானதொரு நாடு"

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு நன்றாக உள்ளது. இதனால் அது குறித்து அச்சப்படாது வெளிநாட்டு அணிகள் தாராளமாக அங்கு சென்று விளையாடலாம் ௭ன இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கண்காட்சி இருபது–20 போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பாகிஸ்தானை சென்றடைந்த போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கண்காட்சிப் போட்டியில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு நன்றாக உள்ளது. இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. பாதுகாப்பு விடயத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கருத்தை கொண்டிருக்கலாம். ஆனால் ௭ன்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு அணிகள் தாராளமாக இங்குவந்து விளையாடலாம் ௭ன அவர் தெரிவித்தார்.

கடந்த 2009 அம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலினையடுத்து அங்கு இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ௭துவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது அந்நாட்டின் சிந்து மாகாணத்தின் அமைச்சரொருவரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி போட்டியில் சர்வதேச பதினொரு பேர் கொண்ட அணிக்கும் பாகிஸ்தான் நட்சத்திர பதினொரு பேர் கொண்ட அணிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற 2 இருபது–20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில், சர்வதேச பதினொருவர் அணிக்கு சனத் ஜெயசூரியவும் பாகிஸ்தான் நட்சத்திர பதினொரு பேர் அணிக்கு ஷஹிட் அப்ரிடியும் தலைமைதாங்கவுள்ளனர்.