விரிவுரைகளை மீள ஆரம்பிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்; ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ளனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப்புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாத இறுதிவரை கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இன்றுவரை விரிவுரையாளர்கள்; தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் எமது பொன்னான கல்வி வீணடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு பல்கலைக்கழக விரிவுரைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

1) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 6 வீதம் இலவசக் கல்விக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் நிலைபேறான தரமான இலவசக்கல்வி தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

2) உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதில் ஒரு முறையான ஒழுங்கையும் இலவசக் கல்வியை தொடர்ந்து அதேதரத்தில் பேணவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) பட்டதாரி மாணவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்ப தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

4) பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் இஸட் புள்ளி பற்றிய குளறுபடிகள் நீக்கப்பட்டு பல்கலைக்கழக அனுமதிகள் உரிய வேளையில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரின் சம்பள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக தொடர்ந்து இடம்பெற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka