மாவட்டச் செயலகத்தில் மின்விநியோகம் பாதிப்பு: அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக மின்சார சபை மீது குற்றச்சாட்டு

யாழ். மாவட்டச் செயலகத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டபோதும் மின்சார சபை உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நீண்டகாலமாக மீன்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருகின்றது. இதனால் மாவட்டச் செயலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இலத்திரனியல் சாதனங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அரச அதிபரின் காரியாலயத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயங்களில் 25 தடவைகளுக்கு மேலாக மின்சாரம் தடைப்படுகின்றது. நேற்றைய தினம் அமெரிக்க இராஜதந்திரிகள் வருகை தந்திருந்தபோதும் மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டிருந்தது. இது குறித்து மின்சார சபையிடம் முறையிட்டபோதும் இன்று வரை மாவட்டச் செயலகத்திற்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய மின்மாற்றிகள் பெறுவதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டபோதும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு மின்சாரம் வழங்க வளாகத்தில் இருக்கும் மரங்கள் இடையூறாக இருக்கின்றன என்று மின்சார சபை தெரிவித்ததனால் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றுவதற்கு விசேட அனுமதியைப் பெற்று அதனை அகற்றிய பின்னரும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எதனையும் மின்சார சபை எடுக்காது அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் சகல நிர்வாக கட்டமைப்பை நெறிப்படுத்தும் மாவட்டச் செயலகத்தில் உள்ள மின்சார பிரச்சினையை தீர்க்க மின்சார சபை முன்வராத பட்சத்தில் சாதாரண மக்களினால் முன்வைக்கப்படும் மின்சாரம் பிரச்சினை தொடர்பான கோரிக்கையை எவ்வாறு மின்சார சபை தீர்த்துவைக்கும் என்றும் மாவட்டச் செயலக வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka