கூடங்குளம் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- திருமாவளவன் அறிக்கை!

அமைதியான முறையில் போராடிவரும் கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என் விடுதலை சிறத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கைவிடுத்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருளை நிரப்பக்கூடாது என்றும் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அமைதியான முறையில் அறவழியில் மக்கள் கட்டுப்பாடாக இன்று போராட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் வன்முறைக்கு துளியளவில் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் போராடிவரும் மக்கள் மீது திடீரென்று சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடித் தாக்குதல் நடத்தியும் படகுகளை அடித்து நொறுக்கியும் காவல்துறையினர் பெரும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் தமிழக அரசு காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டுவதும் தாக்குவதும் கடுமையான கண்டனத்துக்குரியது. இதுவரை கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட வந்த அரசு இயந்திரத்தைச் சார்ந்த எவரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் மக்களுக்கிடையில் ஊடுருவி போராட்டத் தலைவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

அணுஉலைக்கெதிராக அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறையைக் கைவிட்டு அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மகத்தான பல மாற்றங்கள் மக்களின் தீவிரமான போராட்டங்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன என்று வரலாறு சொல்லும் செய்தியை புறந்தள்ளிவிடாமல் அரசு உடனடியாக போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும். குறிப்பாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அவர்களுடன் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இவண்ணம்
தொல். திருமாவளவன்

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka