காதல். கல்யாணம்… காமம்.. பணம்… கல்யாண ராணியின் லீலைகள்

சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்களை மட்டுமின்றி பெண்களிடமும் நட்பாகப் பழகி பல லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருப்பதாகவும் சகானா மீது புகார்கள் குவிந்துள்ளன.

இளைஞர்களைத் தேடித் தேடிப் பிடித்து காதலிப்பதாகக் கூறி கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான் சகானாவின் பாணி. இளைஞர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளை சரளமாக உதிர்ப்பது சகானாவுக்கு கை வந்த கலையாக இருந்திருக்கிறது. பொதுவாக இளைஞர்கள் தம்மைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காக தம்மை அனாதை என்றும் கோடீஸ்வரியான தம்மை உறவினர்கள் கொல்ல முயற்சிக்கின்றனர் என்றும் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். தாம் வீழ்த்தும் வலையில் விழும் இளைஞர்களுக்கு செல்போன் நம்பரை தாரளமாக கொடுத்து மனம்கவரும் வகையில் பேசுவதையும் ஒரு யுக்தியாக வைத்திருந்திருக்கிறார்.

சரி திருமணத்துக்குப் பிறகு என்ன செய்திருக்கிறார்? 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்திருந்தாலும் எந்த ஒரு கணவரோடும் வெளியில் ஒன்றாக சுற்றியதே கிடையாதாம்.. இதற்குக் காரணமாக தமக்கு சாபம் இருக்கிறது என்று சாக்கு போக்கைக் கூறியிருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு பணம் சுருட்டல் என்ற இலக்கை அதிரடியாக ஆரம்பித்துவிடுவாராம்.

இதேபோல் பல பெண்களிடமும் கூட நெருங்கிப் பழகி பல லட்சத்தை சுருட்டிக் கொண்டதாகவும் சகானா மீது புகார்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன.

காதல்.. காமம்… கல்யாணம்..பணம் என்ற லட்சியத்துடன் பல இளைஞர்களை வசீகரித்து வளைத்திருக்கும் சகானா மீது கொலை வழக்கு ஒன்றையும் கேரளப் போலீசார் பதிவு செய்திருக்கின்றனர். சகானா எப்போது சிக்குவார்? இன்னும் என்ன என்ன உண்மைகள் வருமோ?

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka