உள்ளக இணைப்பிலுள்ள தவறு காரணமாக மின் விநியோகம் பாதிப்பு; யாழ். மாவட்டச்செயலக குற்றச்சாட்டுக்கு மின்சாரசபை மறுப்பு

உள்ளக இணைப்பிலுள்ள தவறு காரணமாக மின் விநியோகம் பாதிப்பு; யாழ். மாவட்டச்செயலக குற்றச்சாட்டுக்கு மின்சாரசபை மறுப்பு

யாழ். மாவட்டச் செயலகத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருவதற்கு உள்ளக மின் இணைப்பில் உள்ள குறைபாடே காரணம் என்று யாழ் மாவட்டத்திற்கான பிரதேச மின்பொறியியலாளர் ஞானகணேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நீண்டகாலமாக மீன்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருகின்றது. இதனால் மாவட்டச் செயலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இலத்திரனியல் சாதனங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபையிடம் தெரிவிக்கப்பட்டபோதும் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக வட்டாரங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்ட போதே யாழ் மாவட்டத்திற்கான பிரதேச மின்பொறியியலாளர் ஞானகணேசன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

'யாழ் மாவட்டச் செயலகத்தில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் அளவுக்கதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக போட்டோ பிரதி இயந்திரம், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களின் பயன்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

சிறிய மின் இணைப்புக்கள் மூலமே உள்ளக மின் இணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உள்ளக மின் இணைப்புக்களில் உள்ள பிரச்சினை காரணமாகவே மாவட்டச் செயலகத்தில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. சிறிய இணைப்புக்கள் மூலம் மின்சார விநியோகம் நடைபெறுவதினால் இதன் கொள்ளளவு குறைவானதாகவே இருக்கின்றது. இதனை சீர் செய்யும் பட்சத்தில் மின்சார சபையினால் சிறந்த சேவையை வழங்க முடியும்.

அத்துடன் பிரதான வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின் மாற்றி மூலமே மாவட்டச் செயலகத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. புதிய மின்மாற்றி ஒன்றை மாவட்டச் செயலக வளாகத்தினுள் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஒருமாத காலத்திற்குள் மின்மாற்றி பொருத்தும் பணி நிறைவு பெற்று விடும். மின்மாற்றி பொருத்தப்பட்ட பின்னரும் உள்ளக இணைப்பு சீர் செய்யப்படாவிட்டால் மீண்டும் மின்சாரம் தடைப்பட வாய்ப்பபுக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka