அமெரிக்க இராஜதந்திரிகள் குழு யாழில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார நிலமைகள் குறித்து ஆராய்வு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க குழுவினர் வடக்கில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் உதவித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை திரட்டிச் சென்றனர் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

மேலும், வேலையற்ற இளைஞர்கள் தொடர்பான தகவல்களையும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கைகளையும் திரட்டிய மேற்படி இராஜாங்க குழுவினர், மொழிகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர் என்று அரசாங்க அதிபர் கூறினார்.

அமெரிக்க இராஜாங்க நிகழ்ச்சித் திட்ட பிரதித் தலைவர் வில்லியம்ஸ் வேய்ன்ரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் இன்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வருகின்றீர்களென அமெரிக்க செயற்திட்ட பிரதித் தலைவர் வில்லியம்ஸ் வேய்ன்ரன்ஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'குடிசைக் கைத்தொழில், கோழி வளர்ப்பு, வெல்டிங், தையல், சிறு கைத்தொழில், விவசாயம், போன்றவற்றின் மூலம் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப உதவிகள் வழங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக, குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கைத்தொழில் உபகரணங்களும் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றம் உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், மேலதிக அரச உத்தியோகத்தர்கள் மூலம் குறைந்த வட்டியுடனாக்ன வங்கிக் கடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடன் உதவிகள் மூலம் மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளகின்றார்கள்.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் தகவல் திரட்டு நிலையத்தில் வேலையற்ற இளைஞர்களின் தகவல்கள் திரட்டி வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராம மட்;டங்களில் மொழிச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கள உத்தியோகஸ்தர்கள் யாழ். மாவட்ட தமிழ் மக்களுடன் கிராம மட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள், அதே போன்று, தமிழ் உத்தியோக்தர்கள் சிங்கள மக்களுடன் இணைக்கப்பட்டு மொழி விருத்திகளை மேம்படுத்திக்கொள்கின்றனர் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில், அமெரிக்க அரசியல் ஆலோசகர் மைக்கல் கொனிஸ்ரஜன், செயற்திட்ட இயக்குனர் ஜேம்ஸ் எப் பெட்னர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka