சுட்ட மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ரஜினி - பட அதிபர் உருக்கம்

சுட்ட மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ரஜினி - பட அதிபர் உருக்கம்
தெலுங்கு பட அதிபர் ஹரிராம் ஜோகையா சமீபத்தில்அளித்த பேட்டி ஒன்றில்  ரஜினியின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருந்தது என்றும் ரொம்ப கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் நிலைக்கு முன்னேறி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்
 
சிலுக்கம்மா செப்பன்டி படப்பிடிப்பில் ரஜினிக்கு நேர்ந்த துயரங்களை நேரில் பார்த்தது பற்றி ஹரிராம் ஜோகையா கூறியதாவது:–
 
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1977–ல் சிலுக்கம்மா செப்பன்டி என்ற தெலுங்கு படப்பிடிப்பில் ரஜினி பட்ட கஷ்டங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
 
இந்த படம்தான் பிறகு தமிழில் கமல் நடிக்க நிழல் நிஜமாகிறது என்ற பெயரில் ரீமேக் ஆனது.ரஜினியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை துயரமானதாகவே இருந்தது. அப்போது அவர் பெரிய நடிகர் இல்லை. எனவே படப்படிப்பில் யாரும் அவரை கண்டு கொள்வது இல்லை. பொருட்டாகவும் மதிப்பது இல்லை.
 
சிலுக்கம்மா செப்பன்டி படப்பிடிப்பில் ரஜினி சாதாரணமான நடிகர் என்பதால் அவரை காக்க வைத்தனர். மற்ற நடிகர், நடிகைகள் காட்சியைத் தான் முதலில் படமாக்கினர். கடைசியாக படப்பிடிப்பு முடியும் போது தான் ரஜினியை அழைத்து அவர் காட்சியை எடுத்தனர்.
 
ஆனாலும், ரஜினி படப்பிடிப்பை விட்டு நகராமல் மற்றவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டே இருப்பார் திடீரென அவருக்கு பசி எடுக்கும். உடனே எழுந்து போய் கோதாவரி ஆற்றங்கரை ஓரத்தில் விற்பனைக்காக வைத்து இருக்கும்  சுட்ட மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கி சாப்பிடுவார். அதுதான் அவரது உணவாக இருந்தது. அப்போது ரஜினியை பார்த்தவர்கள் எதிர்காலத்தில் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நினைத்திருக்கவே முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.