எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற பிரேரணையை ஆளுங்கட்சி உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி சபையில் கொண்டு வந்தார்.

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பல வழிகளில் மாசடைந்து வருகின்றது. அதனை பாதுகாப்பதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை பரஞ்சோதி முன்வைத்தார்.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்

சுன்னாக எண்ணெய் கசிவால் நீர் மாசடைந்தமை தொடர்பில் மூன்று விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

விதிமுறைகளை மீறி மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதிவில் இன்னும் 10 வருடங்களுக்கு இயங்குவதாக உள்ள நொர்தேன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியை அவ்விடத்தில் தொடர்ந்து இயங்காமல் தடுத்தல், இலங்கை மின்சார சபை, நொர்தேன் பவர் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து நிவாரணங்கள் பெற்று, அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்களை சீர் செய்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல், இவ்வாறானதொரு மின்பிறப்பாக்கியை இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இயங்கவிடாமல் தடுத்தல் என்பன தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர் என்ற ரீதியில் ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்

சுன்னாக எண்ணெய் கசிவால் இதுவரையில் 683 கிணறுகள் பாதிப்படைந்துள்ளன.

அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். எண்ணெய் கசிவுள்ள நீரை பயன்படுத்தியமையால் மலட்டுத்தன்மை, தோல்புற்றுநோய் என்பன ஏற்படும் எனவும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அங்கவீனவர்களாகவும், புத்திக்கூர்மை குறைந்தவர்களாகவும் பிறப்பார்கள் எனவும் மருத்துவ அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் திருமணத்துக்கு அஞ்சுகின்றனர்.

பாதிப்புக்கள் தொடர்பில் சரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. யாரையும் குறைகூறுவதற்கு என்று இல்லை. சரியான நேரத்தில் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தால் பாரிய பாதிப்புக்களிலிருந்து தப்பித்திருக்க முடியும்.

காலம் தாழ்த்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதின் விளைவு காரணமாகவே பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன.

எண்ணெய் பாதிப்பு தொடர்பில் உதவி செய்வதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜப்பான் தூதுவர் கூறிய விடயம் தொடர்பில் அடுத்த வடமாகாண அமர்வுக்கு முன்னராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா

இலங்கை மின்சார சபை, 1958 ஆம் ஆண்டு மின்சார விநியோகத்தில் ஈடுபட்ட அக்ரிகோ, மற்றும் நொர்தேன் பவர் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து நிவாரணங்கள் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும். இந்த விடயத்தில் எவ்வித கட்சி பேதமுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று கூறினார்.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்

'விடுதலைப்புலிகள் குண்டு போட்டதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக' நொர்தேன் பவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் அண்மையில் கூறியிருந்தார். அவர்கள் செய்த பிழையை புலிகள் மீது போட இயலாது. நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முடியாது. இதனை நிறுத்துவதற்கு மாகாண சபைக்கு உரிமையுண்டு.

மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கில் இணைந்து, வழக்கு நடவடிக்கைகளை பார்வையிட்டு சரியான தீர்வை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண விவசாய அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் போது, பதவியிலிருந்த உள்ளுராட்சியை சேர்ந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குடிப்பதற்கு நீர் வழங்க முடியும். ஆனால், மற்றைய தேவைகளுக்கான நீரை வழங்க முடியாது. மின்சாரத்தை வேறு வழிகளில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எமது மண் மாசடைவது முடியாது. எமது இனம் அழிவடைவதையும் பார்க்க முடியாது.

இந்தியாவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இங்கிருக்கும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரலிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

நொர்தேன் பவர் நிறுவனத்தை தடை செய்தல், அவர்களிடமிருந்து நிவாரணங்கள் பெற்றுக்கொள்ளல், மற்றும் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் ஆகிய மூன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு, எண்ணெய் கசிவு மேலும் பல இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

எண்ணெய் கசிவு தாக்கம் குறித்து விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தை தருமாறும், அதற்கு நடவடிக்கை எடுத்துத்தருவதாகவும் ஜப்பான் தூதுவர் என்னிடம் கூறியிருந்தமைக்கமைய பாதிப்பு தொடர்பில் ஆய்வு நடத்தி விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

அதனை விரைவில் அவருக்கு கையளித்து, இது தொடர்பில் தீர்வு காண முனைவோம் என உறுதியளித்தார்.