இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் எஸ்.டி தட்சணாமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர்.

அதனையடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என துணைத்தூதுவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லைதாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு தடவைகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 38 பேரே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தங்களை விடுதலை செய்ய கோரி உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பேசி இருந்தேன் . சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சிறைச்சாலைக்கு சென்ற நானும் எனது குழுவினரும் அவர்களுடன் பேசி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இதேவேளை, இவ்வாறானதொரு போராட்டம் சிறைச்சாலைக்குள் நடக்கவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் பொய் கூறுகின்றார்கள் எனவும் கொழும்பில் உள்ள சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த 38 இந்திய மீனவர்களுக்குமான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.